#1391 to #1396

#1391. மனத்தில் இனிது இருந்தாள்

கண்ட விச் சத்தி யிருதய பங்கயம்
கொண்டவித் தத்துவ நாயகி யானவள்
பண்டையவ் வாயுப் பகையை அறுத்திட
இன்றென் மனத்து ளினிதிருந் தாளே.

அன்பர்களின் மனம் உலகப் பொருட்களுடன் பொருந்தி இருக்கும் போது சக்தி தேவி இதயத் தாமரையில் இருந்து வருவாள். உலகப் பொருட்களுடன் தொடர்பினை விலக்கி விட்டு; உலக காரணமாகிய நாதம், விந்து இவற்றுடன் அன்பரின் சித்தம் பொருந்தும் போது; தேவி சீவன், அதன் உடல் இவற்றின் மீது இருந்து வந்த வாயுவின் கட்டினை நீக்கி விடுவாள். சீவனின் மனதில் இன்பம் பெருக்குபவளாக ஆகி விடுவாள்.

#1392. தேவியின் தோற்றம்

இருந்த இச்சத்தி இரு நாலு கையில்
பரந்த இப் பூங்கிளி, பாசம், மழு வாள்
கரந்திடு கேடகம் வில் அம்பு கொண்டு அங்கு
குரந்தங்கு இருந்தவள் கூத்து உகந்தாளே.

இந்த சக்தி தன் எட்டுக் கரங்களில் விரிந்த மலர், கிளி, பாசம், மழு, வாள், கேடயம், வில், அம்பு என்னும் எட்டு பொருட்களைத் தங்கி இருப்பாள். ஆரவாரம் செய்த வண்ணம் தன் கூத்தையும் விருப்பத்துடன் புரிந்தாள்.

#1393. பச்சை நிறம் அவள் மேனி

உகந்தனள் பொன்முடி முத்தாரமாகப்
பரந்த பவளமும் பட்டாடை சாத்தி
மலர்ந்தெழு கொங்கை மணிக்கச் சணிந்து
தழைந்தங் கிருந்தவள் தான் பச்சையாமே
.

சக்தி தேவி பொன் முடியையும், முத்து மாலைகளையும் மிகவும் விரும்புவாள். பவழ மாலை அணிந்து கொண்டு, செம்பட்டு ஆடையை உடுத்துவாள். மலர்ந்து எழும் கொங்கைகளில் அவள் மணிகள் பதித்த கச்சையை அணிந்திருப்பாள். விரும்பி அன்பர் உள்ளத்தில் உறையும் அந்தத் தேவியின் நிறம் பச்சை.

#1394. பாங்கிமார் நாற்பத்தெண்மர்

பச்சை யிவளுக்குப் பாங்கிமார் ஆறெட்டு
கொச்சை யாரெண்மர்கள் கூடி வருதலால்
கச்சணி கொங்கைகள் கையிரு காப்பதாய்
எச்ச இடைச்சி இனிதிருந் தாளே.

பச்சை நிறம் கொண்ட இந்தத் தேவிக்குப் பாங்கிமார் நாற்பது எட்டுப் பெண்கள். எப்போதும் கூடவே இருக்கும் எட்டுத் தோழியர் இனிய மழலையில் மிழற்றுவர். எனவே இரு புறங்களிலும் காவல் உடையவளாகக் கச்சணிந்த தேவி மெலிந்த இடையுடன் இனிதாக அமர்ந்திருப்பாள்.

#1395. பரந்தெழு விண்ணில்!

தாளதின் உள்ளே தயங்கிய சோதியைக்
காலது வாகக் கலந்துகொள் என்று
மாலது வாக வழிபாடு செய்து நீ
பாலது போலப் பரந்தெழு விண்ணிலே.

மூலாதாரத்தில் இருக்கும் சக்தி பேரொளி வடிவானவள். அவளைச் ” சுழுமுனை வழியே மேலே சென்று சிவனுடன் கலந்து கொள்!” என்னும் போது அவள் விருப்பமும் அதுவே ஆகும். மூலாதார வாயுவை மேல் நோக்கிச் செலுத்தினால் காதலனைக் கூடச் செல்லும் காதலியைப் போல நீயும் விண்ணில் பரந்தெழ இயலும்.